ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில், 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளைய வரவு செலவுத்திட்ட சபை நடவடிக்கைகளில் ஆளும் தரப்பு ஆசனத்தில் அமரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளைய தினம் ஆளும் கட்சியின் ஆசனத்தில் அமரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, டயானா கமகே மற்றும் அரவிந்தகுமார் ஆகியோருக்கு ஆளும் கட்சியின் பக்கத்தில் ஆசனத்தை பெற்றுக்கொடுக்குமாறு ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.
இதேவேளை, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு சார்பாக வாக்களித்த தமது கட்சியைச் சேர்ந்த 8 உறுப்பினர்களுக்கு ஆளும் கட்சியில் ஆசனங்களை ஒதுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும், எஞ்சியுள்ள 6 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி பக்கத்தில் தனியான இடத்தில் ஆசனத்தை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் தரப்பு பக்கத்தில் காணப்படுகின்ற ஆசனப் பற்றாக்குறை காரணமாகவே எஞ்சிய 6 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்தரப்பு பக்கத்தில் வேறொரு இடத்தில் அமரவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.