மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் சம்பள நிர்ணய சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ள சம்பளத் தொகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் 200இற்கும் மேற்பட்ட ஆட்சேபனை மனுக்கள் நேற்று (15) சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் 22 கம்பனிகள் உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினர் சம்பள நிர்ணய சபையிடம் நேற்று தமது ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளனர்.
தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு நேற்று நண்பகல் 12 மணி வரை தொழில் திணைக்களத்தினால் காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று பெருந்தோட்டக் கம்பனிகள், சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், தனியார் தோட்ட உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினர் தமது எதிர்ப்பை வெளியிடும் வகையில் ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபையினால் கடந்த 8ஆம் திகதி முன்வைக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தது.
ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளம் வழங்குவது குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு அன்றைய தினம் நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் எட்டு தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களும், அரசாங்கம் சார்பில் கலந்துகொண்டிருந்த மூவரும் ஆதரவாக வாக்களித்ததுடன், கம்பனிகள் சார்பில் பங்கேற்றிருந்த எண்மர் எதிராக வாக்களித்திருந்தனர்.
அதனடிப்படையில் நாளாந்த அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாவும் மேலதிக நிவாரணக் கொடுப்பனவாக 100 ரூபாவும் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
இந்தத் தீர்மானத்துக்கு எதிராக ஆட்சேபனைகளை முன்வைப்பதற்காகவே நேற்று வரை காலஅவசாகம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே 200இற்கும் மேற்பட்ட ஆட்சேபனை மனுக்கள் சம்பள நிர்ணய சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் அடுத்தகட்டமாகக் கலந்துரையாடுவதற்காக சம்பள நிர்ணய சபை இம்மாதம் 19ஆம் திகதி கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (Thamilan)
Discussion about this post