வெலிகம – மோதர பகுதியில் 100 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடி படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வசமிருந்த மோட்டார் வாகனமொன்றையும், 100 கிலோகிராம் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடி படையின் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமையவே, இந்த சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
கொழும்பு – கொட்டிகாவத்தை பகுதியிலிருந்து சொகுசு வாகனமொன்றில் போதைப்பொருளை கொள்வனவு செய்வதற்காக, மோதர பகுதிக்கு நபர் ஒருவர் வருகைத் தந்துள்ளதாக விசேட அதிரடி படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, குறித்த பகுதியை சுற்றி வளைத்த விசேட அதிரடி படையினர், சொகுசு வாகனமொன்றை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
குறித்த வாகனத்திலிருந்து 25 கிலோகிராம் போதைப்பொருளை கைப்பற்ற முடிந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.
இந்த வாகனத்தில் பயணித்த மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக, மறைத்து வைக்கப்பட்டிருந்த 75 கிலோகிராம் போதைப்பொருளை கண்டுபிடிக்க முடிந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
இத்தாலியை நோக்கி தப்பிச் சென்றுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரான ரத்கம விதுர என்ற நபருக்கு சொந்தமான போதைப்பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
குறித்த போதைப்பொருள், கடல் மார்க்கமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இருவர் வெலிகம பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் கொழும்பு – கொட்டிகாவத்தை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட அதிரடி படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.