ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள இரண்டு பாடசாலைகளை தவிர, ஏனைய அனைத்து பாடசாலைகளும் திறக்கப்பட்டுள்ளதாக வலய கல்வி பணிப்பாளர் பழனிமுத்து ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் – வெளிஓயா மலைமகள் தமிழ் வித்தியாலயம் மற்றும் ஆக்ரோயா தமிழ் வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளுமே இன்று திறக்கப்படவில்லை என அவர் கூறினார்.
குறித்த பகுதிகளில் சில கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அம்பகமுவ பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய, இந்த பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
இதேவேளை, மலையகத்திலுள்ள ஏனைய அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் வழமை போன்று இடம்பெற ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை, குறிப்பிடத்தக்களவு காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.