செவணகல – கிரிஇப்பன்வெல பகுதியில் 13 வயதான சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்றைய தினம் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பல நாட்களாக பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறுமி கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களிடையே சிறுமியின் உறவினர்; ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிரிஇப்பன்வெல பகுதியில் 13 வயதான சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தனமல்வில பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மீது பிரதேசவாசிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.
.இந்த குற்றச்சாட்டுடன் குறித்த அரசியல்வாதிக்கு தொடர்புள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்திருந்தனர்.
சம்பவத்தை மூடி மறைப்பதற்கு பிரதேச அரசியல்வாதியொருவர் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
இந்த சம்பவத்தை எதிர்நோக்கிய சிறுமி, வைத்திய பரிசோதனைகளுக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பதில்
தனமல்வில பிரதேச சபைக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட உறுப்பினர் ஒருவர் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடுமையான ஒழுக்கங்களை பின்பற்றி செயற்படுகின்ற கட்சி என்ற வகையில், தமது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களிடமும் கட்சி சிறந்த ஒழுக்கத்தை எதிர்பார்த்துள்ளது.
தமது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளுக்கு வேட்பு மனு வழங்கப்படும் சந்தர்ப்பத்தில், சமூகத்திற்குள் அவர் ஒழுக்கத்துடனும், சட்டதிட்டங்களை பின்பற்றுகின்றமை குறித்தும் அவதானிக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவிக்கின்றது.
சட்டவிரோதமான மற்றும் ஒழுக்கமற்ற முறையில் செயற்படுவோருக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், அவர்களின் கட்சி உறுப்புரிமையையும் இதற்கு முன்னர் ரத்து செய்துள்ளதாக அந்த கட்சியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனமல்வில பிரதேச சபையின் உறுப்புரிமை உடன் அமுலுக்குவரும் வகையில் ரத்து செய்யப்படுவதுடன், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு, அவரை கட்சியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த கட்சியின் பிரதம செயலளார் சட்டத்தரணி சாகர காரியவசத்தின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.