கொரோனா எனப்படும் கொவிட் 19 வைரஸ் தடுத்து நிறுத்தும் நோக்கில், மக்கள் அநாவசியமான முறையில் ஒன்று திரள்வதை தடுக்கும் நோக்குடன் அரசாங்கத்தினால் இடைக்கிடை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஊரடங்குச்; சட்ட அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக பெருந்திரளானோர் பொலிஸ் நிலையங்களுக்கு வருகைத் தருகின்றமை கண்காணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மக்கள் ஒன்றிணைவதாவது, கொரோனா ஒழிப்பு திட்டத்திற்கு பாரிய தடையாக அமைந்துள்ளது.
அனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைகளுக்கு அமைய பதில் பொலிஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்னவினால் ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரத்தை விநியோகிக்கும் புதிய நடைமுறையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரத்தை விநியோகிக்கும் நான்கு நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பொலிஸ் தலைமையகம், மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் அலுவலகம், பிராந்தியத்திற்கான பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களில் இந்த அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் 50 அல்லது அதற்கு அதிகமான ஊழியர்களை கொண்ட நிறுவனங்களுக்கான ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரத்தை விநியோகிக்கும் அதிகாரம் பொலிஸ் தலைமையகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தின் கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 50 அல்லது அதற்கு அதிகமான ஊழியர்களை கொண்ட நிறுவனங்களுக்கான ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரத்தை விநியோகிக்கும் அதிகாரம் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 50 அல்லது அதற்கு அதிகமான ஊழியர்களை கொண்ட நிறுவனங்களுக்கான ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரத்தை விநியோகிக்கும் அதிகாரம் அந்தந்த மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், அந்தந்த பொலிஸ் பிரிவுகளில் 10 ஊழியர்களுக்கு அதிகமாகவும், 50 ஊழியர்களுக்கு குறைவாகவும் கடமையாற்றும் நிறுவனங்களுக்கான ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரத்தை விநியோகிக்கும் அதிகாரம் பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள 10 ஊழியர்களுக்கு குறைவான நிறுவனங்களுக்கான ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரத்தை விநியோகிக்கும் அதிகாரம் அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அதேபோன்று மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரத்தை விநியோகிக்கும் அதிகாரம் அந்தந்த பகுதிகளுக்கு பொறுப்பான பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பத்தை எந்த அலுவலகத்திற்கு வழங்க வேண்டும் என்பதை முன்கூட்டிய தீர்மானித்துக் கொள்ளுமாறு பதில் பொலிஸ் மாஅதிபர் நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த அனுமதிப் பத்திரம் நியாயமான காரணங்களினால் மாத்திரமே விநியோகிக்கப்படும்.
ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், அமைச்சுக்கள், திணைக்களங்கள், சபைகள் உள்ளிட்ட நிறுவனங்களின் ஊழியர்கள் தமது நிறுவனத்தின் அடையாளஅட்டையை ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும். தமது சேவைக்கான அடையாளஅட்டை தவறாக பயன்படுத்தப்படுமாக இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரத்தை விநியோகிக்கும் புதிய நடைமுறைகள் அடங்கிய சுற்றுநிரூபம் https://www.police.lk/ இணையத்தளத்திலும், அரசாங்க தகவல் திணைக்கள இணையத்தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.