உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்ற பின்னணியில், வெளிநாடுகளில் பல இலங்கையர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக செய்திகள் அண்மையில் வெளியாகியிருந்தன.
இந்த செய்திகளின் உண்மை தன்மை தொடர்பில் அறிந்துக்கொள்ள ட்ரூ சிலோன், வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரியொருவரை தொடர்புக் கொண்டு வினவியது.
பிரித்தானியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, சுவிஸர்லாந்து மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடந்த காலங்களில் இலங்கை பிரஜைகள் உயிரிழந்துள்ளமை தொடர்பான தகவல்கள் தமக்கு பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், கொரோனா தொற்று காரணமாக சுவிஸர்லாந்தில் உயிரிழந்தவர் தொடர்பிலேயே தமக்கு அந்தநாட்டு அரசாங்கம், சுவிஸர்லாந்து பொலிஸ் அறிக்கையொன்றை சமர்பித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இது மாத்திரமே தமக்கு உத்தியோகப்பூர்வ அறிவிப்பாக கிடைக்கப் பெற்ற ஒரேயொரு கொரோனா உயிரிழப்பு என வெளிவிவகார அமைச்சின் அதிகாரி குறிப்பிட்டார்.
அது தவிர்த்து, பிரித்தானியாவில் ஐந்து இலங்கையர்களும், அமெரிக்காவின் ஒரு இலங்கையரும், அவுஸ்திரேலியாவில் ஒரு இலங்கையரும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் மற்றும் ஊடகங்கள் ஊடாக தாம் அறிந்துக்கொண்டதாக அவர் கூறினார்.
எனினும், இந்த உயிரிழப்புக்கள் குறித்து இதுவரை தமக்கு உத்தியோகப்பூர்வ அறிவிப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் கொரோனா மரணங்களுக்கு இவற்றை உள்ளடக்கி அறிக்கையொன்றை தம்மால் வழங்க முடியாது என அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் பல உயிரிழப்புக்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சுக்கு பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் ஒன்று மாத்திரமே கொரோனா உயிரிழப்பு என தமக்கு உத்தியோகப்பூர்வமாக பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.