கொரோனாவின் புதிய வீரியத்துடனான வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பிலான ஆய்வுகளை நடத்துவதற்கான வசதிகள் தம்மிடம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் பிரதம தொற்று நோய் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவிக்கின்றார்.
அவ்வாறான வீரியம் கொண்ட வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் நாட்டில் அடையாளம் காணப்படும் பட்சத்தில், அதிவுயர் பாதுகாப்புடன் சிகிச்சைகளை அளிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, பிரித்தானியாவில் புதிய வீரியத்துடனான வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ள பின்னணியில், பல நாடுகள் பிரித்தானியாவிற்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.
இதன்படி, பிரித்தானியாவிற்கான விமான சேவையை இலங்கையும் இடைநிறுத்தியுள்ளது.
பிரித்தானியாவிலிருந்து இறுதியான நேற்று முன்தினம் 26 பேரை கொண்ட குழுவொன்று இலங்கையை வந்தடைந்தது.
இவ்வாறு இலங்கை வந்தவர்களுக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் எவருக்கும் கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
அதேபோன்று கடந்த 21ம் திகதி 23 பேரை கொண்ட குழுவொன்றும் பிரித்தானியாவிலிருந்து வருகைத் தந்துள்ள அதேவேளை, அவர்களுக்கும் கொவிட் தொற்று ஏற்படவில்லை என சுகாதார பிரிவு உறுதிப்படுத்துகின்றது.
எவ்வாறாயினும், அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனிமைப்படுத்தல் நிறைவு பெற்றதன் பின்னர், மீண்டுமொரு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)