இலங்கையின் பிரபல மற்றும் மூத்த ஊடகவியலாளரான ஏ.பி.மதன், இன்று தனது ஊடக வாழ்க்கையிலிருந்து விடைப் பெற்று, விவசாயத்தில் தடம் பதித்துள்ளமை அனைவராலும் பேசப்படும் ஒரு விடயமாகும்.
தமிழ் மிரர் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக கடமையாற்றிய ஏ.பி.மதன், திடீரென தனது பேஸ்புக் ஊடாக தனது இராஜினாமா தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் திகதி அவரது பிரியாவிடை இடம்பெற்றது.
அந்த சந்தர்ப்பத்தில் அவரது அடுத்தகட்ட நகர் என்னவென்பது குறித்து யாரும் அறிந்திருக்கவில்லை.
இவ்வாறான பின்னணியில், தான் தனது சொந்த ஊருக்கு சென்று, விவசாயத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு பலருக்கும் ஆச்சரித்தையும், புதுமையையும் ஏற்படுத்தியது.
பல தசாப்தங்கள் ஊடக வாழ்க்கையில் உயரிய பதவியிலிருந்த ஒருவர், திடீரென விவசாயத்தை தேர்ந்தெடுப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இவரது பதவி விலகல் தொடர்பில், பலரும் பல விதமாக பேசிய போதிலும், அவரது உண்மை கதையை அண்ணாச்சி நியூஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
வயதான தனது தாயுடன் வாழ்வதற்காகவும், ஊடகத்தை போன்று தான் நேசிக்கும் மண்ணை காப்பதற்காகவுமே தான் பதவியை இராஜினாமா செய்ததாக அவர் அண்ணாச்சி இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.
ஏ.பி.மதன், தற்போது யாழ்ப்பாணம் – பளை பகுதியிலுள்ள தனது சொந்த ஊரில் வாழ்ந்து வருகின்றார்.
தனக்கு சொந்தமான தனது காணியிலேயே, அவர் நெல் விளைச்சலை மேற்கொண்டு வருகின்றார்.
தற்போது நெல் அறுவடைக்கு தயாராகவுள்ளதாகவும் ஏ.பி.மதன் தெரிவித்துள்ளார்.
தனது காணியின் மறுபுறத்தில் கால்நடை வளர்ப்பையும் அவர் மேற்கொண்டு வருகின்றார்.
விவசாயம் என்பது செல்வத்தை குவிக்கும் ஒரு தொழில் எனவும், இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விவசாயத்தை மேற்கொண்டால், இலகுவாக வருமானத்தை ஈட்டலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, தான் ஊடகத்துறையை இன்னும் கைவிடவில்லை என கூறிய அவர், ஊடக சார் விரிவுரைகளை தான் மேற்கொண்டு வருவதாகவும் ஏ.பி.மதன் கூறுகின்றார். (TrueCeylon)
Discussion about this post