மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணிவந்த தமிழ் சினிமா பிரபல்யத்திற்கு மலேசிய அரசாங்கம் தடை விதிக்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணி வந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் இரண்டு அரசியல்வாதிகள் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், பினாங்கு துணை முதலமைச்சர் ராமசாமியும் எந்தநேரத்திலும் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தான் தலைமறைவாகவில்லை எனவும், தன்னை கைது செய்தால் அதனை எதிர்கொள்ள தயாராகவுள்ளதாகவும் ராமசாமி தெரிவித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், திடீர் கைதுகள் குறித்து மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த நாட்டு பயங்கரவாதத் தடுப்பு பிரிவின் அதிகாரி அயூப், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தமிழ் சினிமா பிரபல்யம் ஒருவருக்கும் தொடர்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதென இதன்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த பயங்கரவாதத் தடுப்புபிரிவின் உயர் அதிகாரியான அயூப், குறித்த தமிழ் சினிமா பிரபல்யத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புள்ளமை உறுதிப்படுத்தப்படுமானால், அவருக்கு மலேசியாவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்படும் என கூறியுள்ளார்.