திட்டமிட்ட வகையில் வாகன ஆவணங்களை தயாரிக்கும் மோசடி தொடர்பிலான தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
கடுவளை பகுதியில் வைத்து, மிரிஹான விசேட விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடுவளை பகுதியில் வைத்து, போத்தல பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சில வாகனங்களுக்கு இலக்கத்தகடுகள் கிடையாது என முறைப்பாடு செய்த வகையிலான போலி ஆவணங்களை தயாரித்து, அவற்றை மோட்டார் வாகன திணைக்களத்திற்கு அனுப்பி, அதனூடாக உரிய இலக்கத் தகடுகளை பெற்றுக்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இதையடுத்து, வாடகைக்கு பெற்றுக்கொள்ளும் வாகனங்கள், திருடப்படும் வாகனங்களுக்கு உரிய இலக்கத் தகடுகளை பொருத்தி, அவற்றை விற்பனை செய்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
ஒரே இலக்கத் தகடுகளை கொண்ட வாகனங்கள் இதற்கு முன்னராக காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அது இவ்வாறான நடவடிக்கைகளின் ஊடாகவே இடம்பெறுகின்றது எனவும் கூறினார்.
வாகன உரிமையாளர்கள், தமது வாகனங்களின் ஆவணங்கள் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வாகனங்களின் ஆவணங்கள் வேறொரு தரப்பிடம் செல்லும் பட்சத்தில், மோசடிகாரர்களுக்கு இவ்வாறான மோசடிகளை மேற்கொள்ள இலகுவாக இருக்கும் என அவர் கூறுகின்றார்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post