வவுனியா − செட்டிக்குளம் − பேராறு பகுதியில் இராணுவத்தின் மீது எவரும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவில்லை என இராணுவம் தெரிவிக்கின்றது.
இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இதனைக் குறிப்பிட்டார்.
வனப் பகுதியின் சம்பவம் நேர்ந்த இடத்திற்கு எவரும் செல்ல அனுமதிக்காத நிலையில், அங்கு சிலர் நடமாடியதை அவதானித்ததை அடுத்தே இராணுவத்தினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
குறித்த மூன்று நபர்களும் ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கையொன்றிற்காகவே அங்கு சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
எவ்வாறாயின், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன கூறினார்.
வவுனியா − செட்டிக்குளம் வனப் பகுதியில் மூன்று பேர் இராணுவத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்திருந்தது.
இதையடுத்து இராணுவம் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனினும், சம்பவத்தை எதிர்நோக்கியவர்கள், பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நிராகரித்தனர்.
தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தவில்லை என அவர்கள் கூறியிருந்தனர்.
தம்மிடம் எந்தவொரு ஆயுதமும் அந்த சந்தர்ப்பத்தில் இருக்கவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில், ட்ரூ சிலோன் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் இராணுவ ஊடகப் பேச்சாளரை தொடர்புக்கொண்டு வினவியது.
அதற்கு பதிலளித்த போதே, அவர் இவ்வாறு கூறினார்.(TrueCeylon)
Discussion about this post