வவுனியா – கற்பகபுரம் பகுதியில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கத்தின் வாகன தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் நடத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றனர்.
மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளதது.
கற்பகபுரம் – 4ஆம் கட்டை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை இளைஞர்கள் சிலர் வழிமறைத்துள்ளனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் வாகனத்தை விட்டு இறங்கி, குறித்த இளைஞர்களுடன் கலந்துரையாடல்களை நடத்திய சந்தர்ப்பத்திலேயே, வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தை தொடர்ந்து, இளைஞர்கள், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், வவுனியா – பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் நடத்தி வருகின்றனர்.