நல்லாட்சி அரசாங்கத்தின் காலப் பகுதியில் ரிஷாட் பதியூதீன், அரசாங்கத்திற்கு சொந்தமான 775 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி, மன்னார் – தாராபுரம் கூட்டுறவு கிராமத்தை நிர்மாணித்துள்ளதன் ஊடாக, இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டை அடுத்தே, அமைச்சின் செயலாளரினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டை அடுத்து, கடந்த 22ம் திகதி அமைச்சர் பந்துல குணவர்தன, தாராபுரம் பகுதிக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
தாராபுரம் வாவிக்கு அருகில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்தல், கட்டிடமொன்றை நிர்மாணித்தல் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்தல், ஆரம்ப பாடசாலை, பராமரிப்பு நிலையம், விளையாட்டு மைதானம் நிர்மாணித்தல் ஆகிய நடவடிக்கைகளுக்காக 775 மில்லியன் ரூபாவை செலவிட அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாக அமைச்சரவை பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
தாராபுரம் பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் இந்த கூட்டுறவு கிராம திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு குறிப்பிடுகின்றது.
இந்த நிதியை பயன்படுத்துவதற்காக கூட்டுறவு சங்கமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், அதன் உறுப்பினர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்லவென்பது தெரியவந்துள்ளதாக அறிய முடிகின்றது.
வரவு செலவுத்திட்டத்தில் 2017ம் ஆண்டு 300 மில்லியன் ரூபாவும், 2018ம் ஆண்டு 200 மில்லியன் ரூபாவும் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த கூட்டுறவு கிராமம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு முன்னாள் வர்த்தக அமைச்சர் சமல் ராஜபக்ஷ, பொலிஸ் மாஅதிபருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
இனவாத செயற்பாடுகளில் பயிற்சிகளுக்காக இந்த கூட்டுறவு கிராமம் பயன்படுத்தப்படுகின்றதா என்பது குறித்து விசாரணை நடத்துமாறே, குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
தாராபுரம் கூட்டுறவு கிராம திட்டத்திற்காக இதுவரை செலுத்தாதுள்ள 60 மில்லியன் ரூபா நிதியை செலுத்துமாறு கோரி, வர்த்தக அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் ஒருவர், அமைச்சர் செயலாளர் பத்ராணி ஜயவர்தனவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
இந்த நிதித் தொகையை செலுத்த முடியாது என கூறியுள்ள அமைச்சின் செயலாளர், குறித்த கோரிக்கையை அமைச்சரிடம் முன்வைத்து, அந்த நிதித் தொகை செலுத்துவதை தடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மேலதிக செயலாளர், இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போது நிதி அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றி வருகின்றார்.