பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், வர்த்தக அமைச்சராக இருந்த காலப் பகுதியில் சதொசவில் இடம்பெற்றதாக கூறப்படும் பல பில்லியன் ரூபா மோசடி தொடர்பிலான ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த ஊழல், மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக கணக்காய்வு நிறுவனமொன்று தற்போது ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு ஆராயப்பட்டு வந்த தருணத்திலேயே, ஆவணங்கள் காணாமல் போனமை தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சதொச நிறுவனத்தில் 2015 முதல் 2019ம் ஆண்டு வரையான காலம் வரை அங்கு பணிப் புரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாத நிலைக்கு, குறித்த நிறுவனம் நட்டமடைந்திருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சதொச நிறுவனத்திற்கு பொருட்களை விநியோகிக்கும் விநியோகத்தர்களுக்கு, 8 பில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகை செலுத்த வேண்டியிருந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு விநியோகத்தருக்கு மாத்திரம், குறித்த காலப் பகுதியில் 8 கோடி ரூபாவிற்கும் அதிக தொகை செலுத்த வேண்டி இருந்ததாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகின்றார். (TrueCeylon)
Discussion about this post