சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்வது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதனை தவிர்க்கும் வகையில் பாராளுமன்ற பொதுச் செயலாளருக்கு வழங்கப்பட்ட உத்தரவை, மார்ச் மாதம் 16ம் திகதி வரை நீடிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
ரஞ்ஜன் ராமநாயக்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு மீதான விசாரணைகளின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரஞ்ஜன் ராமநாயக்க சார்பில் முன்னிலையாகும் ஜனாதிபதி சட்டத்தரணி பையிஸ் முஸ்தபாவிற்கு, தனிப்பட்ட காரணங்களின் நிமிர்த்தம் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலையாக முடியவில்லை என்பதனால், வழக்கு மீதான விசாரணைகளை வேறொரு தினத்திற்கு ஒத்தி வைக்குமாறு நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனால், ரஞ்ஜன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை ரத்தாவதை தடுக்கும் வகையி;ல் விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை நீடிக்குமாறும் சட்டத்தரணி சுமந்திரன் கோரிக்கை விடுத்திருந்தார்.
ரஞ்ஜன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் நீதிமன்றத்தினால் வெளியிடப்பட்ட உத்தரவை சபாநாயகர் நேற்றைய தினம் வெளியிட்டதாகவும், சபாநாயகர் இந்த உத்தரவு குறித்து தவறான புரிதலை கொண்டுள்ளதாகவும் சுமந்திரன் நீதிமன்றில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)
Discussion about this post