வடக்கு மாகாணத்திற்கு அண்மித்த கடற்பரப்பிலுள்ள மூன்று தீவுகளில் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான திட்டத்தை சீனாவிற்கு வழங்குவது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானத்தையும் எட்டவில்லை என மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவிக்கின்றார்.
இந்த திட்டத்தை சீனாவிற்கு வழங்குவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள போதிலும், அதற்கு நிதி அமைச்சின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவையில் அனுமதி கிடைத்தவுடன், அந்த அனுமதி குறித்து நிதி அமைச்சு ஆய்வொன்றை நடத்தும் என அவர் கூறினார்.
இந்த ஆய்வுகளை நடத்துவதற்காக நிதி அமைச்சு, மின்சார சபையிடமிருந்து அறிக்கையொன்றை கோரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நிதி அமைச்சின் அந்த அனுமதி இதுவரை கிடைக்காமையினால், அமைச்சரவையின் முழு அனுமதி இதுவரை கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக அமைச்சரவை தீர்மானமொன்றை எட்டியதன் பின்னர், அதற்கான எதிர்ப்புக்கள், நிதி இயலுமைகள் தொடர்பில் ஆராய வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
இவ்வாறான அனைத்து விடயங்கள் தொடர்பிலும் ஆராய்ந்தே, இறுதி தீர்மானம் எட்டப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
குறித்த தீவகப் பகுதியில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்காக, இதே திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்தியாவும் முன்வந்துள்ளதாக அமைச்சர் கூறுகின்றார்.
இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்காக 12 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடுவதற்கான யோசனை திட்டத்தை இந்தியா முன்வைத்துள்ளதாகவும் அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post