மேல் மாகாணத்திற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் நாளை நள்ளிரவுடன் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய தளர்த்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, நாளை நள்ளிரவிற்கு பின்னர் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
எனினும், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள், தமது பிரதேசத்திலிருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள், தமது வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டியது அத்தியாவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அனைத்து தரப்பினரும் சுகாதார வழிமுறைகளை கடைபிடிப்பதும் அவசியமானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
நாட்டில் 27 பொலிஸ் பிரிவுகளும், 5 கிராம சேவகர் பிரிவுகளும் தொடர்ந்து தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 23 பொலிஸ் பிரிவுகள் மேல் மாகாணத்தில் காணப்படுகின்றன.
தனிமைப்படுத்தல் பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுகின்றனவா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விமானப்படை மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் திட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.