மேல் மாகாணத்தில் இயங்கும் சுமார் 800 ஏற்றுமதி தொழிற்சாலைகளை, கொவிட் வைரஸ் தொற்றினால் முன்னோக்கி நடத்திச் செல்வதில் பாரிய சிரமங்கள் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ள தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை கம்பஹா மாவட்டத்திலேயே அமைந்துள்ளதாக அறிய முடிகின்றது.
இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 400ற்கும் அண்மித்த தொழிற்சாலைகள் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், முதலீடு சபையின் கீழ் இயங்கும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் ஐந்தும் இதில் அடங்குவதாக அறிய முடிகின்றது.
இந்த முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்குள் சுமார் 164 தொழிற்சாலைகள் காணப்படுகின்றன.
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் 79 தொழிற்சாலைகளும், பியகம முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் 55 தொழிற்சாலைகளும், மீரிகம முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் 8 தொழிற்சாலைகளும், மல்வானை முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் 6 தொழிற்சாலைகளும், வத்துபிட்டிவல முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் 16 தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.
இந்த தொழிற்சாலைகளில் மாத்திரம் சுமார் 80,000 வரையான தொழிலாளர்கள் கடமையாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று, ஹொரண மற்றும் சீதாவக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களிலும் கொவிட் தொற்றினால் பெருமளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
உரிய காலப் பகுதியில் வெளிநாடுகளுக்கு தமது பொருட்களை ஏற்றுமதி செய்துக்கொள்ள முடியாமையினால், தமது நிறுவனங்கள் பாரிய நட்டத்தை எதிர்நோக்கி வருவதாக தொழிற்சாலைகளின் உரிமையாளர் தெரிவிக்கின்றனர்.
கொவிட் தொற்றினால் கம்பஹா மாவட்டத்திலுள்ள தொழிற்சாலைகளுக்கே அதிகளவிலான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (TrueCeylon)