கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை நல்லடக்கம் செய்வது தவறான நடவடிக்கை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், கொவிட்-19 தொற்றாளர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் குழுவின் உறுப்பினருமான பேராசிரியர் மெத்திக்கா விதானகே தெரிவிக்கின்றார்.
சிங்கள இணையத்தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழக்கும் நபர்களுக்காக, எதிர்கால சமூகத்தை பழிக்கொடுக்க முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல், சமூகம் மற்றும் மதம் ஆகிய விடயங்களை முன்னிலைப்படுத்தி, இவ்வாறான தீர்மானமொன்றை எட்டுவது தவறான விடயம் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொவிட்-19 தொற்றாளர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் குழுவின் தீர்மானம் அடங்கிய அறிக்கை ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அறிக்கையின் பிரகாரம், கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்கள் புதைக்கப்படக்கூடாது என குழுவின் அனைத்து உறுப்பினர்களும் தீர்மானத்தை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கையில் நிலத்தடி நீர் அதிகளவில் காணப்படுகின்றமையினால், சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டால், குறித்த கிருமி, ஆறுகள், குளங்கள் மற்றும் கிணறுகளின் நீருடன் கலப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை 24 மணித்தியாலங்களுக்குள் அழிக்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொவிட் தொற்றினால் உயிரிப்போரின் பூதவுடல்களுக்கு, சுகாதார வழிகாட்டல்களுக்கு கீழ் மத சடங்குகளை செய்வதற்கும் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி கடந்த அமைச்சரவை கூட்டத்தில் கூறியுள்ள பின்னணியிலேயே கொவிட்-19 தொற்றாளர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் மெத்திக்கா விதானகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.