இந்தியா – அவுஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 244 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.
இந்தியாவின் அபார பந்து வீச்சால் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 191 ரன்னில் வீழ்ந்தது .
அவுஸ்திரேலியா அணி 72.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. அதிகபட்சமாக டிம் பெய்ன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ், பும்ரா தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 53 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. அகர்வால் (5), பும்ரா (0) ஆகியோர் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கியது. பும்ரா 2 ரன்களிலும், அகர்வால் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலி 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பும்ரா, புஜாரா, கோலி ஆகிய முக்கிய விக்கெட்டுகளை பேட் கம்மின்ஸ் வீழ்த்தியதால் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.
சகா (4), அஸ்வின் (0) ஆகியோர் ஹாசில்வுட் ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஹனுமா விகாரியின் (8) விக்கெட்டையும் கைப்பற்றினார். கடைசியில் முகமது ஷமி காயத்தால் வெளியேறினார். இதனால் இந்திய அணி ஆட்டத்தை முடித்துக்கொண்டது.
இந்திய அணி 36 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு 90 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது..
இந்திய அணி ஒரு இன்னிங்சில் எடுத்த மிகக்குறைந்த ரன் இதுவாகும். இதற்கு முன்பு 1974ல் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி ஒரு இன்னிங்சில் 42 ரன்கள் எடுத்ததே மிகக்குறைந்த ரன்னாக இருந்தது.
அவுஸ்திரேலிய அணி தரப்பில் ஹசில்வுட் 5 விக்கெட்டும் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
இதனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.(Trueceylon)