கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தை துப்பரவு செய்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
கிளிநொச்சி – கனகபுரம் பகுதியிலுள்ள மாவீரர் துயிலுமில்லத்தை துப்பரவு செய்ய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் உள்ளிட்ட தரப்பினர் இன்று காலை முயற்சித்துள்ளனர்.
துப்பரவு பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த தருணத்தில், அங்கு வருகைத் தந்த கிளிநொச்சி தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர், துப்பரவு பணிகளை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
கொரோனா தொற்று பரவும் காலப் பகுதியில் அதிகளவிலானோரை ஒன்று திரட்டியமை குறித்து எஸ்.சிறிதரனிடம், பொலிஸார் வினவியுள்ளனர்.
கொரோனா நடைமுறைகளை பின்பற்றியே தாம் துப்பரவு பணிகளை மேற்கொண்டு வருவதாக எஸ்.சிறிதரன் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
குறித்த இடம் துப்பரவு செய்யப்படுகின்றமை குறித்து பாராளுமன்ற உறுப்பினரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்த பொலிஸார், சுகாதார நடைமுறைகளுடன் துப்பரவு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துரைத்தார்.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கு, ஜனாதிபதி எந்தவித தடையும் விதிக்கவில்லை என அவர் கூறினார்.
இவ்வாறான நிலையில், இந்த முறையும், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால் தடை விதிக்கப்படாது என தாம் நம்புவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் தான் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளதையும் எஸ்;.சிறிதரன் இதன்போது நினைவூட்டினார்.