ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கோரிக்கைக்கு, அதிகளவிலான கவனம் செலுத்தியே, இந்திய அரசாங்கம் இலங்கைக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்கியதாக கொவிட் தடுப்பூசி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான லலித் வீரதுங்க தெரிவிக்கின்றார்.
அத தெரண பிக் போகஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
190 நாடுகள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வரிசையில் இருக்கின்ற போதிலும், இலங்கைக்கு இந்தியா முன்னுரிமை வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், இந்தியாவினால் வழங்கப்பட்ட தடுப்பூசிக்கு மேலதிகமாக எத்தனை தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் என பிக் போகஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் சத்துர எழுப்பிய கேள்விக்கு, லலித் வீரதுங்க பதிலளித்தார்.
இலங்கைக்கு மிக விரைவில் எஸ்டா செனிகா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த தடுப்பூசியின் பெறுமதி 3 முதல் 4 அமெரிக்க டொலர் வரை உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மிகவும் இலாபமாக இந்;த பெறுமதியை கொண்ட தடுப்பூசியே தற்போது காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறான நிலையில், சீனாவினால் 3 லட்சம் தடுப்பூசிகள் விரைவில் வழங்கப்படும் என அவர் கூறுகின்றார்.
எனினும், தேசிய ஓளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் அனுமதி கிடைக்கும் வரை தாம் பொறுமையாக காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அதேபோன்று, உலக சுகாதார ஸ்தாபனம் 20 வீதமான தடுப்பூசிகளை இலவசமாக வழங்கவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
எனினும், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்படும் தடுப்பூசிகள் நாட்டிற்கு எப்போது கிடைக்கும் என்பது இன்னும் நிச்சயமற்றே காணப்படுகின்றது என லலித் வீரதுங்க தெரிவிக்கின்றார்.
எனினும், மார்ச் மாதம் நடுப்பகுதி அல்லது மார்ச் மாதம் இறுதிக்குள் இந்த தடுப்பூசி நாட்டிற்கு கிடைக்கும் என தனக்கு அறிய கிடைத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இவ்வாறான நிலையில், மார்ச் மாத இறுதிக்குள் இலங்கைக்கு 3 வகையிலான கொவிட் தடுப்பூசிகள் கிடைக்கும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்த தடுப்பூசியானது, சிறியளவிலான பாதுகாப்பு மாத்திரமே என கூறிய அவர், சுகாதார தரப்பினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். (TrueCeylon)
Discussion about this post