நாராஹேன்பிட்டி மோட்டார் வாகன திணைக்களத்தில் கடமையாற்றும் சில அதிகாரிகள், மாதமொன்றுக்கு 5 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை மோசடி செய்கின்றமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை அடுத்து, திணைக்களத்தின் ஆணையாளர்கள், பிரதி ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள் உள்ளிட்ட 20 அதிகாரிகள் அடங்களாக மேலும் பலருக்கு இடமாற்றம் வழங்குவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, மோட்டார் வாகன திணைக்களத்தினால் வெளியிடப்படும் சாரதி அனுமதிப் பத்திரத்தை அச்சிடும் நடவடிக்கை, எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இராணுவத்திற்கு வழங்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ஐந்து ஆணையாளர்கள், 15 பிரதி மற்றும் உதவி ஆணையாளர்கள் இதற்கான நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் அதிக மோசடி இடம்பெறும் அரச நிறுவனமாக, மோட்டார் வாகன திணைக்களத்தை கணக்காய்வாளர் திணைக்களம் பெயரிட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் ஊடாக, கடந்த காலங்களில் பொதுமக்களின் கோடிக்கணக்கான ரூபா பணத்தை அதிகாரிகள் மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோட்டார் வாகன திணைக்களத்தில் கடமையாற்றிய முன்னாள் ஆணையாளர் நாயகங்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் சொத்துக்களை ஆராய்வதன் ஊடாக, மோசடி தொடர்பிலான தகவல்களை அறிந்துக்கொள்ள முடியும் என திணைக்களத்தின் கனிஷ்ட அதிகாரிகள் மற்றும் கணக்காய்வாளர் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
மோட்டார் வாகன திணைக்களத்தின் ஒரு நாள் சேவை மற்றும் வாகன உரிமையாளர்களின் ஆவணங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்காக உரிமையாளர்கள் திணைக்களத்திற்கு வருகைத் தருவது கட்டாயமாக்கப்பட்டுள்ள பின்னணியில், உரிமையாளர்கள் வருகைத் தராது அந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக 5000 ரூபா லஞ்சம் பெற்றுக்கொள்கின்றமை தொடர்பிலும் தகவல் வெளியாகியுள்ளது.
மோட்டார் வாகன திணைக்களத்தில் நாளொன்றுக்கு 1000 மோட்டார் சைக்கிள்களும், 400 கார்களும், 1500 முச்சக்கரவண்டிகளும் பதிவு செய்யப்படுகின்றன.
இதேவேளை, சாரதி அனுமதிப் பத்திரத்தை அச்சிடும் நடவடிக்கைகள் தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்திற்கு மாதாந்தம் கோடிக்கணக்கான ரூபா வருமானத்தை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிறுவனம் கைச்சாத்திட்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம், 2009ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை மாத்திரமே உடன்படிக்கை காணப்பட்ட போதிலும், அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அந்த உடன்படிக்கை புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உடன்படிக்கை புதுப்பிக்கப்பட்டதன் ஊடாக, மாதாந்தம் 15 கோடி ரூபா வருமானத்தை பெற்றுக்கொடுத்துள்ள அதேவேளை, சுமார் 11 வருடங்கள் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கொடுக்கல் வாங்கல் காரணமாக மாதாந்தம், ஆணையாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு ஒரு தொகை பணத்தை செலுத்த வேண்டிய கட்டாயமும் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.
இவ்வாறான பின்னணியில், மோட்டார் வாகன திணைக்களத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
திணைக்களத்தில் இடம்பெறுவதாக கூறப்படும் மோசடிகள் குறித்த தகவல்களை அடுத்தே, ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், சாரதி அனுமதிப் பத்திரத்தை அச்சிடுவதற்காக குத்தகை வழங்கப்பட்ட நிறுவனத்தின் உடன்படிக்கை இந்த மாதம் 31ம் திகதியுடன் நிறைவடையும் பின்னணியில், ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் சாரதி அனுமதிப் பத்திரத்தை அச்சிடும் நடவடிக்கைகள் இராணுவத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் மோட்டார் வாகன திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் அலஹகோனிடம் வினவப்பட்டது.
இவ்வாறான மோசடிகளை தவிர்த்து, உரிய வகையில் நிறுவனத்தை முன்னோக்கி கொண்டு செல்ல தான் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் கடந்த மார்ச் மாதம் 2ம் திகதியே இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். (TrueCeylon)