எதிர்வரும் 23ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு எட்டியுள்ள தீர்மானம் குறித்து, பாராளுமன்றத்தில் இன்று (20) கேள்வி எழுப்பப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஷமிந்த விஜேசிறி, கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
அதிபர்கள், சிரேஷ்ட ஆசிரியர்கள் மாத்திரமன்றி, சுகாதார தரப்பின் ஆலோசனைகளை பெற்றே தாம் இந்த தீர்மானத்தை எட்டியதாக கல்வி அமைச்சர் பதிலளித்தார்.
அதைவிடுத்து, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான்தோன்றித்தனமாக தாம் இந்த தீர்மானத்தை எட்டவில்லை என கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில், பாடசாலையை ஆரம்பித்து, அதனூடாக பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் கொவிட் கொத்தணியொன்று உருவாகுமாக இருந்தால், அந்த குற்றச்சாட்டை அரசாங்கம், இந்த மாணவர்களின் மீதா சுமத்தும் என ஷமிந்த விஜேசிறி, கல்வி அமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பினார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாணவர்கள் மீது குற்றம் சுமத்தும் எண்ணம் தமக்கு கிடையாது என அவர் பதிலளித்தார்.
மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதார பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் எதிர்காலம் ஆகியவற்றை கருத்திற் கொண்டே தாம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறுகின்றார்.