தனது முதலாவது கார் தொடர்பிலான நினைவுகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் வெளியிட்டுள்ளார்.
“இந்த காரை பெலிஅத்த பகுதியிலுள்ள எனது நண்பர் ஒருவரே 1970ம் ஆண்டில் கொள்வனவு செய்துக்கொடுத்தார். அரசாங்கத்தின் களஞ்சியசாலையிலிருந்து இந்த காரை பெற்றுக்கொண்டேன். இலங்கைக்கு புதிதாக கொண்டு வரப்பட்ட ஃபியர்ட் (FIAT) ரக கார். நான் தான் இந்த காரின் இரண்டாவது உரிமையாளர். எனக்கு முன்பாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரியொருவர் இந்த காரை பயன்படுத்தியுள்ளார். இந்த வாகனத்தின் திறப்பை கலாநிதி பி.டபிள்யூ.எபாசிங்கஹவின் மகளிடமிருந்தே பெற்றுக்கொண்டேன்” என கூறியுள்ளார்.
இந்த கார் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது :- “பின்னரான காலத்தில் எனது நண்பர் எஸ்.ஏ.அமரசிறி இந்த வாகனத்தை கொள்வனவு செய்தார். அவர் இந்த காரை மிகவும் கவனமாக பயன்படுத்தினார். பின்னர் எனது நினைவிற்காக இந்த காரை மீண்டும் கொள்வனவு செய்து வைத்தால், நல்லது என நான் நினைத்தேன். பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளும் எண்ணத்துடன் இருந்தேன். அமரசிறி தற்போது இல்லையென்றாலும், அவரது குடும்பத்தார் எனது 75ஆவது பிறந்த தினத்திற்கு இந்த காரை எனக்கு பரிசாக வழங்கினார்கள்” என பிரதமர் நினைவுகளை பகிர்ந்தார்.
முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ, முதல் முதலில் கொள்வனவு செய்த கார், 50 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் அவருக்கே கிடைத்துள்ளது.
FIAT காரும், காரின் தொழில்நுட்பமும்
5 ஸ்ரீ 3993 என்ற இலக்கத்தை கொண்ட “FIAT 124 SPORT COOPER” காரே, மஹிந்த ராஜபக்ஷவினால் கொள்வனவு செய்யப்பட்ட முதலாவது காராகும்.
இந்த கார் 1966ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப் பகுதியிலுள்ள மிகவும் சொகுசான வண்டியாக இது கருதப்பட்டது. தற்போதுள்ள லெம்போகினி காருடன், இந்த காரை அந்த காலப் பகுதியில் ஒப்பிட முடியும் என கூறப்படுகின்றது.
இத்தாலியின் பெராரி (Ferrari) நிறுவனத்தின் ஏர்லியோ லெம்பர்ட் என்பவரால் ஃபியர்ட் (FIAT) ரக கார் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் நான்கு சக்கரங்களுக்கும் பவர் டிஸ் பிரேக் (Four Wheel Power Diss
Brakes) தொழில்நுட்பம் இருந்துள்ளது.
இந்த காரின் இயந்திர வலு, 1500 CC என கூறப்படுகின்றது.
அந்த காலப் பகுதியிலுள்ள அதிவுயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, அதிவேகமாக செல்லக்கூடிய வகையில் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கார் பந்தயங்களில் கூட, அந்த காலப் பகுதியில் இந்த ரக கார்களே அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான தொழில்நுட்பத்தை கொண்ட காரை, மஹிந்த ராஜபக்ஷ அந்த காலப் பகுதியில் 7500 ரூபாவிற்கே கொள்வனவு செய்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து அமரசிறி 35000 ரூபாவிற்கு இந்த காரை கொள்வனவு செய்துள்ளதாக அவரது மகள் தெரிவிக்கின்றார்.
அந்த காலத்தில் 35000 ரூபா என்றால், தற்போது மூன்றரை கோடி ரூபா என அவர் கூறுகின்றார்.
அமரசிறி, இந்த காரில் பல கார் பந்தயங்களில் ஈடுபட்டுள்ளார்.
70ம் ஆண்டு காலப் பகுதியில் இந்தியாவில் இடம்பெற்ற சர்வதேச கார் பந்தய போட்டியில் தனது தந்தை 2ஆவது இடத்தை இந்த காரை செலுத்தியே பெற்றுக்கொண்டார் என அமரசிறியின் மகள் தெரிவிக்கின்றார்.
தனது தந்தையின் முதலாவது கார் இதுவென்பதனால், அவருக்கு இந்த காரின் மீது மிகுந்த அக்கரை இருந்ததாகவும் அவர் கூறுகின்றார்.
இவ்வாறான நிலையில், இந்த காரே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முதலாவது கார் என்பதை தாம் 2004ம் ஆண்டு காலப் பகுதியிலேயே அறிந்துக்கொண்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறான நிலையில், மஹிந்த ராஜபக்ஷ தனது 75ஆவது பிறந்த தினத்தை அண்மையில் கொண்டாடியிருந்தார்.
இதன்போது, அமரசிறியின் குடும்பத்தார், மஹிந்த ராஜபக்ஷவிற்கு, அவர் பயன்படுத்திய முதலாவது காரை நினைவு பரிசாக வழங்கியுள்ளனர்.