மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட வீடியோ தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.
மஹர சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் தொடர்பிலான காணொளியொன்று நேற்றைய தினம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.
இந்த காணொளியில் கைதிகள் இடையே மோதல் ஏற்பட்ட காட்சி மாத்திரம் காணப்படுகின்ற பின்னணியில், துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட காட்சிகள் எங்கே என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியை எழுப்பினார்.
சிறைச்சாலைக்குள் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ஊடகங்களுக்கு தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.
சிறைச்சாலைக்குள் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படுகின்ற விடயம் தொடர்பிலேயே இந்த பிரச்சினை எழுந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
சிறைச்சாலையொன்றிலிருந்து மற்றுமொரு சிறைச்சாலைக்கு கைதிகள் இடமாற்றப்படுவார்களேயானால், அவர்களுக்கு கொவிட் தொடர்பிலான பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டியது கட்டாயமானது என அவர் கூறியுள்ளார்.
மஹர சிறைச்சாலைக்கு மேலதிகமாக 120 கைதிகள் அனுப்பப்பட்டதாகவும், அதனாலேயே இந்த பிரச்சினை எழுந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு பரிசோதனைகள் நடத்தப்படாது, மற்றுமொரு சிறைச்சாலையிலிருந்து மஹர சிறைச்சாலைக்கு கைதிகள் இடமாற்றப்பட்டதை அடுத்தே, இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இந்த கலந்துரையாடல் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில், அங்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இறுதியில் மோதலாக மாறியது என விஜித்த ஹேரத் கூறுகின்றார்.
சிறைச்சாலையிலுள்ள மாத்திரைகளை அருந்தியே, கைதிகள் சுயநினைவை இழந்து அமைதியின்மை ஏற்படுத்தியதாக கூறும் விடயத்தை விஜித்த ஹேரத் நிராகரித்துள்ளது.
சிறைச்சாலையிலுள்ள மாத்திரைகளை அருந்தினால், நித்திரை வருமே தவிர, மோதல்களில் ஈடுபட முடியாது என அவர் குறிப்பிடுகின்றார்.
சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கு அமைய விநியோகிக்கப்பட்ட மாத்திரைகளே, சிறைச்சாலையில் காணப்பட்டதாக மனநல வைத்திய சங்கத்தை மேற்கோள்காட்டி அவர் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.
சிறைச்சாலையிலுள்ள சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் தவறுதலான புரிதலை வெளிப்படுத்த வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் கேட்டுக்கொண்டுள்ளார். (TrueCeylon)
மஹர சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை