மஹர சிறைச்சாலை மோதலின் போது காயமடைந்து, ராகமை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற கைதிகளின் அறிக்கைகள் காணாமல் போயுள்ளதாக வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகள் சார்பில் முன்னிலையாகியுள்ள மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணிகள், வத்தளை நீதிமன்றத்தில் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளனர்.
மஹர சிறைச்சாலையில் கடந்த 29ம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது 11 கைதிகள் உயிரிழந்திருந்தனர்.
100ற்கும் அதிகமானோர் இந்த சம்பவத்தில் காயமடைந்திருந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.
இவ்வாறு காயமடைந்தவர்களுக்கு பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்புக்கு மத்தியில் ராகமை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான பின்னணியிலேயே, ராகமை வைத்தியசாலையின் அறிக்கைகள் காணாமல் போயுள்ளதாக சட்டத்தரணிகள் நீதிமன்றில் கூறியுள்ளனர்.
மஹர சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் உயிரிழந்த 11 கைதிகளில் 8 பேரின் பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)