மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையினால் உயிரிழந்த 11 கைதிகளில் 9 பேருக்கு கொவிட் தொற்ற உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ராகமை வைத்தியசாலையின் பணிப்பாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
மஹர வைத்தியசாலையில் ஏற்பட்ட அமைதியின்மையினால் 108 பேர் காயமடைந்திருந்தனர்.
இவ்வாறு காயமடைந்தவர்களில் 106 கைதிகளும், 2 அதிகாரிகளும் அடங்குவுதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், உயிரிழந்த 11 பேரின் பூதவுடல் மீதான பரிசோதனைகளில் 9 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மஹர அமைதியின்மைக்கு காரணமானதாக கூறப்படும் 125 கைதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட கைதிகளுக்கு எதிராக, எதிர்வரும் தினங்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் குறிப்பிடுகின்றது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண விலகிய நிலையில், அவரது இடத்திற்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் லலிந்த ரணவீர நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், இந்த அமைதியின்மை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.ஏ.டி.ஈ.எல்.ரந்தெனிய தலைமையிலான 12 பேரை கொண்ட குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார். (TrueCeylon)