பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி, நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட முழு கடையடைப்பு (பூரண ஹர்த்தால்) எதிர்பார்த்தை விடவும் வெற்றியளித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவிக்கின்றார்.
ஹட்டனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மத்திய மாகாணத்திற்கு வெளியில் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலும் பூரண ஒத்துழைப்பு தமக்கு கிடைத்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
அதேபோன்று, கொழும்பிலுள்ள வர்த்தகர்களும் தமக்கு ஆதரவை வழங்கியிருந்ததாக ஜீவன் தொண்டமான் தெரிவிக்கின்றார்.
மேலும், 8 சர்வதேச நாடுகளும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவை வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், தொழிலாளர்களின் போராட்டத்திற்கு சர்வமதத் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், வர்த்தகர்கள், சிவில் அமைப்புக்கள், ஆசிரியர்கள், பெருந்தோட்டத் தொழில்துறை அல்லாத தொழில்துறை சார்ந்தோர் என பலரும் தமது போராட்டத்துடன் இணைந்துக்கொண்டதாக ஜீவன் தொண்டமான் கூறுகின்றார்.
மக்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்ற நினைப்பிலேயே கம்பனிகள் செயற்பட்டு வந்ததாக கூறிய அவர், தொழிலாளர்களின் ஒற்றுமை மற்றும் பலம் ஆகியன இன்று காண்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று தொழிலாளர்களின் பலத்தை கண்டு கம்பனிகள் நடுங்கியுள்ளதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவிக்கின்றார்.
இது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பலத்தை காண்பிப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டம் கிடையாது என கூறிய அவர், கம்பனிகளுக்கு எதிரான போராட்டம் என சுட்டிக்காட்டினார். (TrueCeylon)
Discussion about this post