மலையகத்தில் மிக வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கான உதவித் திட்டங்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.
கனடா செந்தில் குமரன் நிவாரண நிதியம் மற்றும் கொழும்பு கிரான்ட்வே லயன்ஸ் கழகம் ஆகியன இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்திருந்தன.
நுவரெலியா மாவட்டத்தின் லிந்துல, மெராயா, தங்கக்கலை, சென்கூர்ம்ஸ், கரோலியா, வட்டவலை, லொநெக், புருட்ஹில், வெலிஓயா, போடைஸ், ஒற்றரி, இன்வொரி, ஹடடன் பரிசுத்த ஆலய வளாகம் மற்றும் நாவலபிட்டி வெஸ்ட் ஹோல் பகுதிகளுக்கு இந்த நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 கிலோகிராம் எடையுடைய அரிசி, 5 கிலோகிராம் எடையுடைய மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பத்து லட்சம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகள், சுமார் 500 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரிமா கழகம் 306டீ, 1 வட்டாராம் 3ன் தலைவர் லயன் ஜெயபிரகாஷ், கொழும்பு கிராண்ட்வே லயன்ஸ் கழகத்தின் தலைவர் பாஸ்கரன் மஹாமணி, சேவை திட்ட தலைவர் லயன் பத்மநாதன், சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் தலைவர் லயன் ஷிராஜ், லயன் விஜயன், லயன் வித்யரூபன், லயன் கமல் மற்றும் ஹட்டன் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சார்ள்ஸ் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ளனர்.
அத்துடன், மாவட்டம் 306டி 1இன் ஆளுநர் லயன் அல் ஹாஜ் ராஸீக்கின் எண்ணக்கருவிற்கு அமைய, பல்வேறு பகுதிகளில் இவ்வாறான உலர் உணவுப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)