போதைப்பொருள் பயன்படுத்துவோர் என அடையாளம் காணப்படுவோருக்கு, எதிர்வரும் ஆண்டு முதல் கனரக வாகனங்களுக்கான சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்காதிருப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த நடைமுறையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.
கனரக வாகன சாரதி அனுமதிப் பத்திரத்திற்காக விண்ணப்பிக்கும் சாரதிகளுக்கு நடத்தப்படும் விசேட இரத்த பரிசோதனைகளில், கடந்த ஒரு வருடத்திற்குள் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரத்தை விநியோகிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இவ்வாறு ஆண்டு தோறும் விசேட இரத்த பரிசோதனைகள் நடத்தப்படும் என கூறிய அவர், போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டால் வாகன சாரதி அனுமதி பத்திரத்தை விநியோகிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கனரக வாகன சாரதிகள் மற்றும் தனியார் பஸ் சாரதிகள் போதைப்பொருட்களை பயன்படுத்தி, வாகனங்களை செலுத்துவதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டுகின்றார்.
இந்த விசேட இரத்த பரிசோதனைகளை நடத்துவதற்கான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக, தற்போது விலைமனுக்கோரப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் கூறினார். (TrueCeylon)