பொலிஸ் மாஅதிபர் சந்தன விக்ரமரத்ன உள்ளிட்ட அவரது அலுவலக அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மாஅதிபரின் அலுவலகத்திலுள்ள அதிகாரியொருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே, பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட தரப்பினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரபல சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நேற்று (08) நடைபெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு, பொலிஸ் மாஅதிபர் பங்குக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் மாஅதிபரிடம் சாரதிக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, நேற்று முன்தினம் (07) முதல் பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட அவரது அலுவலக அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸ் தலைமையகத்தின் ஏனைய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், பொலிஸ் மாஅதிபர் அலுவலகத்திற்கு செல்வதை தவிர்த்துள்ளதாக சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
இதன்படி, பொலிஸ் தலைமையகத்தை முழுமையாக கிருமி ஒழிப்பு நடவடிக்கைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலிஸ் மாஅதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவின் மலலசேகர மாவத்தையிலுள்ள அலுவலகத்தின் அதிகாரியொருவருக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த பிரிவிலுள்ள அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது (TrueCeylon)