ஜா-எல – பமுனுகம பகுதியில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்த 14 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஜா-எல – போபிட்டிய பகுதியில் திருடர்கள் என சந்தேகிக்கப்படுவோரை பிரதேசவாசிகள் பிடித்து பமுனுகம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், அவர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
அதனைத் தொடர்ந்து, குறித்த சந்தேகநபர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த நிலையில், குறித்த சந்தேகநபர் நடமாடிய பிரதேசங்களிலுள்ள மக்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த சந்தேகநபரை கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறுகின்றது.
பமுனுகம பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே, அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.