பெரும்பான்மை இன பாடசாலைக்கு கீழ் இயங்கும் தமிழ் பிரிவில் கல்வி பயின்று, புலமை பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த தமிழ் மாணவர்களின் வெற்றி பயணத்தை வெளிகொணர ட்ரூ சிலோன் முன்வருகின்றது.
கேகாலை மாவட்டம் வரகாபொல நகர் எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழ் பாடசாலையொன்று இல்லாத நிலையில், மாகாண முன்னாள் முதலைமச்சர் மஹிபால ஹேரத்தின் வழிகாட்டலின் கீழ் வரகாபொல நகரிலுள்ள அம்பேபுஸ்ஸ சிங்கள மகா வித்தியாலயத்தில் ஒரேயொரு கட்டிடம் மாத்திரம் தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அம்பேபுஸ்ஸ சிங்கள மகா வித்தியாலயத்தின் கீழ் இயங்கும் வகையில், 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி, தமிழ் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பாடசாலையொன்றின் தேவையை வலியுறுத்திய ஆசிரியர்கள், பெற்றோர்கள், பிரதேச தமிழ் வர்த்தகர்கள் மற்றும் புத்திஜீவிகளின் கோரிக்கைக்கு அமையவே இந்த தமிழ் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.
தமிழ் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட தருணத்தில் 11 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் மாத்திரமே இருந்துள்ளனர்.
சிங்கள பாடசாலையொன்றின் கீழ் தமிழ் பிரிவு இயங்கவுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அந்த தமிழ் பிரிவை பொறுப்பேற்க எந்தவொரு ஆசிரியரும் முன்வராத நிலையில், வரகாபொல – மாதெனிய பெருந்தோட்ட தமிழ் பாடசாலையில் அதிபராக கடமையாற்றிய எம்.இராஜேஸ்வரி, அம்பேபுஸ்ஸ சிங்கள மகா வித்தியாலயத்தின் கீழ் இயங்கும் தமிழ் பிரிவை பொறுப்பேற்க முன்வந்துள்ளார்.
வரகாபொல – மாதெனிய பெருந்தோட்ட தமிழ் பாடசாலையில் அதிபராக கடமையாற்றிய எம்.இராஜேஸ்வரி, அம்பேபுஸ்ஸ சிங்கள மகா வித்தியாலயத்திற்கு தனது அதிபர் பதவியை விட்டுக்கொடுத்து, அதற்கு குறைந்த பதவியான தமிழ் பிரிவிற்கு பொறுப்பாளர் என்ற பதவிக்கே இந்த பாடசாலைக்கு வருகைத் தந்துள்ளார்.

அம்பேபுஸ்ஸ சிங்கள மகா வித்தியாலயத்தின் தமிழ் பிரிவு
அந்த நொடி முதல் ஆரம்பமான அம்பேபுஸ்ஸ சிங்கள மகா வித்தியாலயத்தின் தமிழ் பிரிவு, படிப்படியாக முன்னேற்ற பாதையை நோக்கி நகர ஆரம்பித்தது.
அன்று 11 மாணவர்கள், 2 ஆசிரியர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலை, இன்று 113 மாணவர்கள், 11 ஆசிரியர்கள் என வளர்ச்சியை நோக்கி நகர்ந்துள்ள போதிலும், பாடசாலைக்கான அடிப்படை வளங்களில் இன்று வரை முன்னேற்றம் ஏற்படவில்லை.
ஒரு பாடசாலை கட்டிடத்தில் மாத்திரமே இந்த தமிழ் பிரிவு இன்றும், இந்த நொடியும் இயங்கி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
எனினும், இந்த ஒரேயொரு கட்டிடத்தில் தரம் 1 முதல் தரம் 8 வரையான வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் இன்று அந்த பாடசாலை வெற்றி சாதனையை நிகழ்த்தியுள்ளது என்றால், அது தான் உண்மை.
2020 புலமை பரிசில் பரீட்சைக்காக 13 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.
இவ்வாறு தோற்றிய மாணவர்களில் நால்வர் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தி பெற்றுள்ளனர்.

புலமை பரிசில் பரீட்சையில் அதிகக்கூடிய புள்ளியாக 200 புள்ளி காணப்படுகின்ற நிலையில், இந்த பாடசாலையில் கல்வி பயின்ற சிவனேஷன் ஜனுஷா என்ற மாணவி 191 புள்ளிகளை பெற்று, மாபெரும் வெற்றி சாதனையை நிகழ்த்தியுள்ளது.
அதற்கு அடுத்தப்படியாக சுதாகரன் வருண் 178 புள்ளிகளையும், இராமசந்திரன் பஷிந்து லக்ஷான் 170 புள்ளிகளையும், இராதா இமேஷிகா 162 புள்ளிகளையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அம்பேபுஸ்ஸ சிங்கள மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மை மாணவர்களை விடவும், அந்த பாடசாலையின் கீழ் ஒரு பிரிவாக இயங்கும் தமிழ் பிரிவு மாணவர்கள் அதிக புள்ளிகளை பெற்றுள்ளமையும் விசேட அம்சமாகும்.
பாடசாலையின் தமிழ் பிரிவு பொறுப்பாளர் தலைமையிலான பாடசாலையின் ஆசிரியர் குழாமிற்கும், புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கும் எமது வாழ்த்துகள்.