இலங்கைக்குள் ஊடுருவ புரவி சூறாவளி, மன்னார் வளை குடாவை நோக்கி படிப்படியாக நகர்ந்து வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதனால் எதிர்வரும் சில மணித்தியாலங்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் கடும் காற்று மற்றும் மழையுடனான வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதுடன், சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
கொழும்பு முதல் புத்தளம், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலில் அலை 2 முதல் 3 மிற்றர் வரை உயரக்கூடும் எனவும், நிலப் பரப்பின் தாழ்நில பகுதிகளில் வெள்ள நீர் உட்புகும் எனவும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, புரவி சூறாவளி காரணமாக எந்தவித பாரிய சேதங்களும் ஏற்பட்டமை குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவிக்கின்றார்.
மரங்கள் மற்றும் மரக்கிளைகள் முறிந்து வீழ்ந்துள்ளமை தொடர்பிலேயே தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அத்துடன், சில பகுதிகளில் மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் முறிந்து வீழ்ந்துள்ளதாக அறிய முடிகின்றது.
சில பகுதிகளில் ஓரளவு வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், குறித்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு, நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ளனர். (TrueCeylon)
புரவி சூறாவளி நிலைக்கொண்டுள்ள இடத்தை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்