பேலியகொட மெனிங் சந்தை தொகுதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
4 மாடிகளை கொண்ட அமைக்கப்பட்டுள்ள இந்த மெனிங் சந்தையில் 3ஆவது மாடி வரை மரக்கறி வகைகளை கொண்டு வருவதற்கான இயலுமை காணப்படுகின்றது.
2 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவிருந்த இந்த மெனிங் சந்தை கட்டிடத் தொகுதி, பின்னரான காலத்தில் 13.5 ஏக்கர் நிலப் பரப்பிற்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத் தொகுதிக்காக 6.5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பேலியகொட மரக்கறி சந்தைத் தொகுதியில் 1192 மரக்கறி வர்த்தக நிலையங்கள் காணப்படுவதுடன், 600 வாகனங்களை நிறுத்துவதற்கான இடவசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஊழியர்களுக்கான ஓய்வறைகள், வைத்திய வசதிகள், வங்கிகள், உணவகங்கள் என அனைத்து வசதிகளும் இந்த வர்த்தக சந்தை தொகுதியில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மெனிங் சந்தைத் தொகுதியை திறந்து வைத்ததை அடுத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரை நிகழ்த்தினார்.
கொவிட்-19 தொற்று காரணமாக, நாட்டின் அபிவிருத்தி பணிகள் எந்தவிதத்திலும் தடைப்படாது முன்னெடுக்கப்படும் என பிரதமர் இதன்போது உறுதியளித்தார்.
எவ்வாறான சிரமங்கள் வந்தாலும், மக்களுக்கு சிரமங்களை எதிர்கொள்ளாது முன்னோக்கி பயணிக்க அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
தமது அரசாங்கம் இருந்த காலப் பகுதியில் எட்டப்பட்ட தீர்மானங்கள், இன்று நிலைநாட்டப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.