இலங்கையில் கொவிட்-19 தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசியை வழங்க, அடுத்த வருடம் நடுப்பகுதி வரை காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என தொற்று நோய் ஆய்வு பிரிவின் பிரதம வைத்தியர், டொக்டர் சுதத் சமரவீர தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள தடுப்பூசியை, அதிக குளிர்மையான இடத்திலேயே வைக்க வேண்டும் என கூறிய அவர், அவ்வாறான வசதிகள் இலங்கையில் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று, கொவிட் தடுப்புக்காக பயன்படுத்தக்கூடிய மருந்து வகைக்கு, உலக சுகாதார ஸ்தாபனம் இதுவரை அனுமதி வழங்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அனுமதி கிடைக்கப் பெறும் வரை, தமக்கு அந்த மருந்தை பயன்படுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இலங்கைக்கு தடுப்பூசியை பெற்றுக்கொள்வது என்றால், அதற்கு அடுத்த வருடத்தின் நடுப்பகுதி வரை காத்திருக்க வேண்டும் எனவும் சுதத் சமரவீர குறிப்பிடுகின்றார்.
எனினும், இலங்கை போன்ற நாட்டில், அதிக குளிர்மையின் கீழ் வைக்கப்படும் மருந்துகளை கொள்வனவு செய்து, அவற்றை பயன்படுத்துவதில் நடைமுறை சிக்கல் காணப்படுகின்றது என தொற்று நோய் ஆய்வு பிரிவின் பிரதம வைத்தியர், டொக்டர் சுதத் சமரவீர தெரிவிக்கின்றார். (TrueCeylon)