வீதி சமிக்ஞைகளில் யாசகர்களுக்கு (பிச்சைக்காரர்) யாசகத்தை வழங்குகின்றமையினால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில், சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யாசகம் பெறும் நடவடிக்கையானது, தற்போது வர்த்தகமாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகின்றது என அவர் கூறுகின்றார்.
யாசகத்தை பெறுவோருக்கு, ஒரு முதலாளி இருப்பதாகவும், யாசகர்கள், யாசகம் பெற்ற தொகையை அந்த முதலாளியிடம் வழங்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
யாசகம் பெறுவோருக்கு முதலாளியினால் சம்பளம் மாத்திரமே வழங்கப்படுகின்றது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.
இந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் யாசகம் பெறுவோரையும், அவர்களுக்கு தலைவராக செயற்படுவோருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
அதேபோன்று, சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் யாசகம் பெறுவோருக்கு, யாசகத்தை வழங்கும் சாரதிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
யாசகத்தை வழக்குகின்றமையினால், ஏதேனும் ஒரு வகையில் வாகன நெரிசல் ஏற்படும் பட்சத்திலேயே சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கூறுகின்றார்.
சமிக்ஞை விளக்குகள் காணப்படுகின்ற இடங்களில் எந்தவொரு சந்தர்ப்பத்தில், யாசகம் கொடுப்பதற்காக வாகனத்தின் கதவு அல்லது வாகனத்தின் கண்ணாடி யன்னலை திறக்க வேண்டாம் என பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கேட்டுக்கொண்டுள்ளளார்.