பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பின் இரண்டாம் நாளான நேற்று, பாராளுமன்றத்தில் நேரடி ஒளிபரப்பு சில மணிநேரம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று சபையில் கேள்வி எழுப்பியது.
அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களை, நாட்டு மக்கள் தெரிந்துக் கொள்வதை தவிர்ப்பதற்காகவா, நேரடி ஒளிபரப்பு தடை செய்யப்பட்டது என எதிர்க்கட்சியினர் இன்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அவ்வாறு இல்லையென்றால், வேறு உள்நோக்கங்கள் காணப்படுகின்றனவா எனவும் சபையில் எதிர்க்கட்சியின் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
அத்துடன், நேரடி ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற ஊடக பிரிவினரால் ஒளிபதிவு செய்யப்பட்ட காணொளியை கூட, ஊடக நிறுவனங்களுக்கு வழங்கவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
கொவிட்-19 தொற்று காரணமாக, பாராளுமன்றத்திற்கு செய்தி சேகரிப்பதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.