பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் போக்குவரத்து வழிமுறைகள் தொடர்பில் தாம் மிகவும் அவதானம் செலுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் பஸ்கள், வேன்கள், முச்சக்கரவண்டி உள்ளிட்ட போக்குவரத்து சாதனங்கள் தொடர்பில் தாம் அவதானம் செலுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைத்து செல்லும் விதம் குறித்த, சுகாதார வழிமுறைகள் பல காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான சுகாதார வழிமுறைகளை பின்பற்றியா மாணவர்கள், பாடசாலைகளுக்கு செல்கின்றனர் என்பது குறித்தே தாம் அவதானம் செலுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
குறிப்பாக முச்சக்கரவண்டிகளில் மூன்றுக்கும் அதிகமான மாணவர்கள் கடந்த காலங்களில் பயணித்த சந்தர்ப்பங்களில் கூட பொலிஸார் சட்ட நடவடிக்கைளை எடுக்கவில்லை என சுட்டிக்காட்டிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், இனிவரும் காலங்களில் அந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் கூறினார்.
பாடசாலை மாணவர்களை அழைத்து செல்லும் போது, சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா, சமூக இடைவெளி பேணப்படுகின்றதா, முகக்கவசங்கள் அணியப்பட்டுள்ளதா என்பது குறித்து அவதானம் செலுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
வாகனத்திற்குள் கட்டாயமாக சமூக இடைவெளி பேணப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதைதவிர, பாடசாலைகளுக்கு உள்ளே, ஏதேனும் உதவிகள் தேவைப்படுமாக இருந்தால், அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கவும் தாம் தயர் என அஜித் ரோஹண கூறுகின்றார்.