கொழும்பு – புறக்கோட்டை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் தரிப்பிடம் மற்றும் பேஸ்டியன் மாவத்தை பஸ் தரிப்பிடம் ஆகியன இன்று நள்ளிரவு முதல் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டை பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், மாகாணங்களுக்கு இடையிலான பஸ்களை, பஸ் தரிப்பிடத்திற்குள் அனுமதிக்க முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிருன்டா தெரிவிக்கின்றார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்குள் பஸ்கள் அனுமதிக்கப்படாத போதிலும், புறக்கோட்டை பஸ் தரிப்பிடத்திற்கு மாத்திரம் அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
மேலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை கடந்து பஸ்கள் பயணிக்க முடியும் என்ற போதிலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பயணிகளை ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியாது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இதேவேளை, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பஸ் சேவைகள் இடம்பெறுகின்றனவா என்பது குறித்து ஆராயப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த நடவடிக்கையானது, இலங்கை முழுவதும் முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
பஸ்களில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் முகக்கவசத்தை அணிந்திருத்தல் வேண்டும், ஆசனங்களுக்கு அமைய பயணிகள் ஏற்றப்பட வேண்டும் என்பதுடன், பஸ்களில் பயணிகளின் பதிவுகளை மேற்கொள்வதற்கான ஆவணமொன்று இருக்க வேண்டும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிருன்டா தெரிவிக்கின்றார்.
ரயில் சேவைகள்
நாளை காலை மற்றும் மாலை வேளைகளில் விசேட அலுவலக ரயில் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.
விசேட ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ரயில் சேவைகள் இடம்பெறாது எனவும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரயில்கள் நிறுத்தப்படாது எனவும் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
எனினும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள கோட்டை ரயில் நிலையத்திற்கு மாத்திரம், அனைத்து ரயில்களும் வருகைத் தரும் என திணைக்களம் கூறுகின்றது.
இதன்படி, பிரதான ரயில் மார்க்கத்தில் மருதானை, வனவாசல, ராகமை, தெமட்டகொட, எந்தரமுல்ல, வல்பொல, களனி, ஹொரபே மற்றும் படுவத்த ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் ரயில் மார்க்கத்தில் பெரலந்த, குடஹகபொல, கட்டுவ, ஜாஎல, குருண, துடுல்ல மற்றும் நீர்கொழும்பு ஆகிய ரயில் நிலையங்களிலும் ரயில்கள் நிறுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேஸ்லயின் மற்றும் கொடாபார ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படாது.
கரையோர ரயில் மார்க்கத்தில், கொத்பனிவீதி மற்றும் அங்குலாணை ஆகிய பகுதிகளில் ரயில்கள் நிறுத்தப்படாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.