முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருகைத்தர வேண்டும் என்ற ஆவணத்தில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களே கையெழுத்து திரட்டியதாக அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அடுத்த அமைச்சரவை திருத்தத்தின்போதே, அவர் பாராளுமன்றத்திற்கு வருகைத் தருவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அவர் கூறினார்.
தாமும் அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதிகாரத்தில் உள்ள கட்சியொன்றை தோற்கடித்து, உள்ளுராட்சி மன்றத் தேர்தலை வெற்றிக் கொண்டு, ஜனாதிபதியொருவரையும் அந்த கட்சியிலிருந்து தெரிவு செய்து, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற நிழலாக இருந்து செயற்பட்டவரே பஷில் ராஜபக்ஷ எனவும் அவர் கூறினார்.
பஷில் ராஜபக்ஷவை பாராளுமன்றத்திற்கு அனுமதிக்குமாறு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடமே கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறு பஷில் ராஜபக்ஷ, பாராளுமன்றத்திற்கு வருகைத் தந்தால், அவருக்கு கிடைக்க வேண்டிய அமைச்சு பொறுப்பு என்னவென, எஸ்.பீ.திஸாநாயக்கவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
புத்தெழுச்சி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பொறுப்பே அவருக்கு கிடைக்க வேண்டும் என அவர் கூறினார்.
வறுமையை ஓழிக்க வேண்டியதே முக்கியமானது எனவும், அதனையே அவர் முன்னர் செய்திருந்ததாகவும் அமைச்சர் நினைவூட்டினார்.