யுத்தத்தில் உயிர்நீத்த பண்டிதர் என்றழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நினைவு கூர்ந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை – கம்பர்மலை பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு சென்ற எம்.ஏ.சுமந்திரன், சின்னத்துரை ரவீந்திரனை நினைவு கூர்ந்ததாக அவரது பேஸ்புக் தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தடை செய்ய கூடாது என போராட்டத்தில் உயிர்நீத்தவர்களின் உறவினர்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயம் என்பதனால், இந்த வழக்கிற்கான தீர்ப்பை வழங்க மாகாண நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என அரச தரப்பினால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளை தனிப்பட்ட ரீதியில் நினைவுக்கூர உரிமை உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவராக சின்னத்துரை மகேஷ்வரியின் மகன், சின்னத்துரை ரவிந்திரன், 1985ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி போராட்டமொன்றில் உயிரிழந்திருந்தார்.
இந்த நிலையில், நீதிமன்றத்தினால் நேற்றைய தினம் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு அமைய, சின்னத்துரை ரவிந்திரனை, அவரது வீட்டில் இன்று நினைவு கூரப்பட்டது.
இந்த நினைவு நிகழ்வில் கலந்துக்கொண்டதாக எம்.ஏ.சுமந்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.