பண்டாரவளை மரக்கறி மொத்த விற்பனை சந்தை மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை மூடப்பட்டிருந்த போதிலும், மரக்கறி வியாபாரிகள் வழமை போன்று தமது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
பண்டாரவளை நகரிலுள்ள மொத்த விற்பனை சந்தைக்கு உள்ளுர் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் பெருமளவில் வருகைத் தந்ததை அடுத்து, மரக்கறி மொத்த விற்பனை சந்தை நேற்று மூடப்பட்டிருந்தது.
குறித்த பகுதியில் கொரோனா தொற்று பரவும் அபாயத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த தீர்மானத்தை பாதுகாப்பு பிரிவினர், அரச அதிகாரிகள் மற்றும் சுகாதார பிரிவினர் இணைந்து எட்டியிருந்தனர்.
எனினும், பண்டாரவளை மரக்கறி மொத்த விற்பனை சந்தை மூடப்பட்டிருந்த போதிலும், மரக்கறி விவசாயிகள்; பண்டாரவளை நகருக்கு அப்பாற்பட்ட வீதிகளில் மரக்கறிகளை வைத்து மரக்கறி வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருவதை காண முடிகின்றது.
இதனால் பண்டாரவளை நகரை அண்மித்த வீதிகளில் இன்றைய தினமும் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததை காண முடிகின்றது.
இந்த நிலையில், பண்டாரவளை பிரதேச செயலகத்தில் இன்று முற்பகல் விசேட கூட்டமொன்று இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் பண்டாரவளை மாநகர சபை மேயர் கனக்க நிஷாந்த பண்டார, பிரதேச செயலாளர் நியால் குணரத்ன, சுகாதார அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.
ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய, மரக்கறி விவசாயிகளின் வீடுகள் அல்லது மக்கள் ஒன்று திரளாத பகுதிகளுக்கு சென்று குறித்த மரக்கறிகளை கொள்வனவு செய்தவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இதன்போது தமது எதிர்ப்பை வெளியிட்டார்.
மொத்த விற்பனை சந்தையை மூடி, இந்த தீர்மானத்தை நிறைவேற்றுமாறே விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், உயர்அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
இதன்போது இரண்டு தரப்புக்கு இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.
இதையடுத்து, இந்த வாக்குவாதத்திற்கு இடையில் குறுக்கிட்ட பண்டாரவளை மாநகர சபை மேயர், மரக்கறி விவசாயிகளின் வீடுகள் மற்றும் மக்கள் ஒன்று திரளாத இடங்களில் மரக்கறி மொத்த விற்பனைகளை நடத்துமாறு உத்தரவிட்டு, கூட்டத்தை நிறைவு செய்திருந்தார்.