சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் பயிற்றுவிப்பாளருமான நுவன் சொயிசா குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
3 குற்றச்சாட்டுக்களில் நுவன் சொயிசா குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி 30 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய நுவன் சொயிசா, 64 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
95 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அவர், 108 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
இந்த நிலையில், நுவன் சொயிசாவிற்கு எதிராக 2018ஆம் ஆண்டு ஊழல் தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நுவன் சொயிசா கிரிக்கெட் தொடர்பிலான எந்தவொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்க சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட நிலையில், அந்த தடையுத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.