கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இலங்கையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பல பிரபலங்கள் சமூக ஊடக சவால் போட்டி ஒன்றை எதிர்கொண்டு நிறைவேற்றி வருகின்றனர்.
ஊரடங்கு நிலையால் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வோரை தவிர்த்த ஏனைய அரசாங்க, தனியார் துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் வீடுகளுக்குள் முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வீடுகளில் தொலைக்காட்சிகளை பார்ப்பது, சமூக வலைத்தளங்களில் காலத்தை கடத்துவது, வீட்டு முற்றத்தில் விளையாடுவது என பலரும் தமது காலத்தை கடத்திச் செல்கின்றனர்.
இந்த நிலையில், ஹோம் கார்டன் சேலேன்ஜ் என்ற சமூக ஊடக சவால் போட்டியை ஆரம்பித்து வைத்தார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ.
தனது வீட்டுத் தோட்டத்தில் தனது மனைவியுடன் நாமல் ராஜபக்ஷ இந்த சவாலை டுவிட்டரில் அறிவித்திருந்தார்.
மரக்கன்றுகளை நட்டு இந்த சவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
”எமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளினால் வரையறுக்கப்படாது, ஒரு நிலையான மற்றும் தன்னிறைவான எதிர்காலத்தை நோக்கி நாம் பார்க்க வேண்டும்” என அவர் தனது டுவிட்டர் குறிப்பில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தனது சவாலை எதிர்கொள்ளும்படி நாமல் ராஜபக்ஷ, மூன்று பிரபலங்களுக்கு டுவிட்டர் ஊடாக அழைப்பு விடுத்திருந்தார்.
தனது தந்தையும், முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ, பிரபல தொழிலதிபர் ஒடார குணவர்தன மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் திமுத் கருணாரத்ன ஆகியோருக்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
சாவலை ஏற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ, தனது மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுடன் இந்த சவாலை எதிர்கொண்டார்.
தனது வீட்டுத் தோட்டத்தில் தனது மனைவியுடன் மரக்கன்றுகளை நடும் வகையிலான படங்களை டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு தனது மகனின் சவாலை அவர் எதிர்கொண்டார்.
அது மட்டுமின்றி , தனது சவால் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தமிழிலும் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
‘ஹோம் கார்டன் சேலேன்ஜ்-இல் பங்கேற்பதில் ஷிராந்தியும் நானும் பெருமகிழ்ச்சியடைகிறோம். கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் உலகைப் பெருமளவில் பாதித்துள்ள அதேநேரத்தில், எமது எதிர்காலச் சந்ததிகளுக்காக நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியத்தையும் இது கற்றுக்கொடுத்துள்ளது” என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, நாமல் ராஜபக்ஷவின் சவாலை ஏற்றுக் கொண்ட பிரபல தொழிலதிபரான ஒடார குணவர்தனவும், மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
ஒடார குணவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் மரக்கன்றுகளை நடும் வகையிலான படங்களை பிரசுரித்துள்ளார்.
அதன்பின்னர், நாமல் ராஜபக்ஷவினால் சவால் விடுக்கப்பட்ட பிரபல கிரிக்கெட் வீரரான திமுத் கருணாரத்னவும், இந்த சவாலை நிறைவேற்றியுள்ளார்.
தனது வீட்டுத் தோட்டத்தில் மரக்கன்றுகளை நடும் வகையிலான புகைப்படங்களை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த ஹோம் கார்டன் சேலேன்ஜ் சவால் தற்போது இலங்கையில் மிகவும் பிரபலமாகியுள்ளது.
வீடுகளில் தனித்திருக்கும் பலர் தமது எதிர்கால சந்ததியின் நன்மை கருதி, கிருமி நாசினிகள் அற்ற இயற்கை வளங்களை கொண்ட மரக்கறி கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.
பெரும்பாலும் இலங்கையிலுள்ள அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா துறையினர், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த வீட்டுத் தோட்ட சவாலை எதிர்கொண்டு வருவதை சமூக வலைத்தல பதிவுகளின் ஊடாக காண முடிகிறது.
-BBC TAMIL-