மஹியங்கனை – ரிதிமாலியத்த – கெமுனுபுர பகுதியைச் சேர்ந்த சந்திமா தமயந்தி (21) என்ற யுவதிக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் தியதலாவை – கஹகொல்ல பகுதியிலுள்ள கொவிட் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
10 நாட்கள் சிகிச்சைகளின் பின்னர், சந்திமா தமயந்தி வீடு திரும்பியுள்ளார்.
இவ்வாறு வீட்டிற்கு வருகைத் தந்த இரண்டு தினங்களில், அவருக்கு சுவாசிக்க சிரமமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் உறவினர்கள், ரிதிமாலியத்த பொது சுகாதார வைத்திய அதிகாரிக்கு தெரிவிக்க முயற்சித்த போதிலும், அந்த முயற்சி பலனளிக்கவில்லை.
தாம் பொது சுகாதார வைத்திய அதிகாரிக்கு பல்வேறு தடவைகள் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட போதிலும், அவர் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை என சந்திமா தமயந்தியின் தாய் குற்றஞ்சுமத்துகின்றார்.
குறித்த சுகாதார வைத்திய அதிகாரி, தனது தொலைபேசி இலக்கத்தை கறுப்பு பட்டியலில் இட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதையடுத்து, சுகயீனமுற்ற சந்திமா தமயந்தியை, சுவசேவன அம்பியூலன்ஸ் சேவையின் உதவியுடன் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, சந்திமா தமயந்தி மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சந்திமா தமயந்தி கடந்த 17ம் திகதி உயிரிழந்துள்ளார்.
சந்திமா தமயந்தியின் இறுதிக் கிரியைகள் நேற்றைய தினம் பதுளையில், சுகாதார நடைமுறைகளின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்டது.
ரிதிமாலியத்த பொது சுகாதார வைத்திய அதிகாரியின் கவனயீனமே, இந்த உயிரிழப்புக்கான காரணம் என அவரது உறவினர்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். (Liveat8)
Discussion about this post