துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு அல்லது திருமணமாகாத நிலையில், கர்ப்பம் தரிக்கும் தாய்மார்களிடமிருந்து குழந்தைகளை பெற்று, அதனூடாக சட்டவிரோத வர்த்தகமொன்றை மேற்கொண்டு வந்த வியாபாரமொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினால் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக இந்த விடயம் வெளியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 47 வயதான நபரொருவர், மாத்தளை – உக்குவளை பகுதியில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இணையத்தளத்தின் ஊடாக விளம்பரத்தை வெளிப்படுத்தி, இந்த வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
பேபி பார்ம் என்ற பெயரில் வெளிநாடுகளில் இந்த வர்த்;தகம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இந்த விசாரணைகளின் ஊடாக, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 12 தாய்மார்கள் குறித்த தகவல்களை பெண்கள் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவு கண்டுபிடித்துள்ளது.
அத்துடன், இவ்வாறு அடையாளம் காணப்பட்ட பெண்களிடமிருந்து மூன்றாவது தரப்பிற்கு கைமாற்றப்பட்ட 5 குழந்தைகள் தொடர்பிலான தகவல்களும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
மூன்று குழந்தைகளுடன் தாய்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், 12 கர்ப்பணித்தாய்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
சுமார் 30 குழந்தைகள் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த வர்த்தகம் மொறட்டுவை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (TrueCeylon)