கேகாலை – ருவன்வெல்ல பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு நடவடிக்கைகளின் போது, பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (28) மாலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
ருவன்வெல்ல பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரான சூலங்க அனுபிரிய அதிகாரி என்பவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தான் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதாக வெளியான செய்தியை அடுத்தே, தான் கடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தன்னை வாகனமொன்றில் சிலர் துப்பாக்கி முனையில் கடத்தியதாகவும் பிரதேச சபை உறுப்பினர், ருவன்வெல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
எவ்வாறாயினும், வாக்கெடுப்பு நடைபெற்ற தருணத்தில், ருவன்வெல்ல பிரதேச சபையின் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே வந்த, கடத்தப்பட்டதாக கூறப்படும் பிரதேச சபை உறுப்பினர், தன்னை கடத்தியதாக கூச்சலிட்டார் என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதையடுத்து, வாக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன், வாக்கெடுப்பு தோற்கடிக்கப்பட்டது.
வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 11 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ருவன்வெல்ல பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடத்தப்பட்டதாக கூறப்படும் உறுப்பினர் தற்போது கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
ருவன்வெல்ல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஒருவரின் ஆதரவாளர்களினாலேயே தான் கடத்தப்பட்டதாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் ருவன்வெல்ல பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். (TrueCeylon)